பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேற்கொண்டு விசாரிக்க போலீசுக்கு தடை இல்லை


பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேற்கொண்டு விசாரிக்க போலீசுக்கு தடை இல்லை
x
தினத்தந்தி 27 Aug 2021 11:06 PM GMT (Updated: 27 Aug 2021 11:06 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்குப் பின்னர் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். உண்மையை வெளியில் கொண்டு வருவதுதான் குற்ற வழக்கு விசாரணை முறையின் நோக்கம் ஆகும். அதனால், இந்த வழக்கை போலீசார் மேற்கொண்டு விசாரிப்பதை தடுக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கலந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு நீலகிரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோடநாடு வழக்கை மேற்கொண்டு விசாரிக்கக்கூடாது. போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியும், கோடநாடு கொலை வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியுமான அனுபவ் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

காலதாமதம்

இந்த மனுவை நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஏ.எல்.சோமயாஜி, ஐ.சுப்ரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

முக்கிய நோக்கம்

சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளின்படி, குற்றவியல் விசாரணைமுறை சட்டத்தின்படி எந்த ஒரு கட்டத்திலும் போலீசார் மீண்டும் புலன் விசாரணையை மேற்கொள்ளலாம். இதில் சந்தேகமோ, எதிர்ப்போ, தவறோ காண முடியாது.

மேற்கொண்டு போலீசார் புலன் விசாரணை செய்தால், நீலகிரி கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை காலதாமதம் ஆகும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனாலும், ஒரு குற்ற வழக்கின் உண்மையை வெளியில் கொண்டுவருவதுதான் முக்கியம் என்று ஹசன்பாஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

விசாரணை அவசியம்

புலன் விசாரணையில் குறைபாடு இருப்பது தெரியவந்தால், அதை நிவர்த்தி செய்ய மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரே நிபந்தனை என்னவென்றால், விசாரணை கோர்ட்டில் போலீசார் தகவல் தெரிவித்துவிட்டு, புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கோடநாடு கொலை வழக்கில் விசாரணை கோர்ட்டுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதை கோர்ட்டும் பதிவு செய்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, விசாரணை முடியும் தருவாயில் இருந்தாலும், நேர்மையான விசாரணையின் அடிப்படையில்தான் நியாயமான தீர்ப்புகளை வழங்கமுடியும். அதனால், இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்வது அவசியமாகிறது. அதேநேரம், நேர்மையான விசாரணைக்கும், விரைவான விசாரணைக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பாதிப்பு இல்லை

ஏற்கனவே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தாலும், அது போலீசார் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு எந்த ஒரு தடையாகவும் இருக்காது. உண்மையை வெளியில் கொண்டுவருவதுதான் முக்கிய நோக்கமாகும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கோடநாடு டீ எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதை தொடர்ந்து பலர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

மனுதாரர் அனுபவ் ரவி கோடநாடு வழக்கில் பாதிக்கப்பட்டவரோ, புகார்தாரரோ கிடையாது. போலீஸ் தரப்பு சாட்சிகளில் அவரும் ஒருவர். அதனால், இந்த வழக்கின் புலன் விசாரணை குறித்து அவர் எதுவும் கூற முடியாது. இதனால் அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

தலையிடத்தேவையில்லை

எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி மேற்கொண்டு போலீசார் புலன் விசாரணை செய்வதற்கு தடை விதிக்க முடியாது. இதில் ஐகோர்ட்டு தலையிடத் தேவையில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story