வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 29 Aug 2021 6:07 PM GMT (Updated: 29 Aug 2021 6:07 PM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடதமிழகத்தையொட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அதேபோல தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) செல்லவேண்டாம்.

அதிகபட்ச மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழக பகுதி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சின்னக்கல்லாரில் 8 செ.மீ. மழையும், நடுவட்டத்தில் 7 செ.மீ. மழையும், கேளம்பாக்கத்தில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story