மாநில செய்திகள்

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர் + "||" + After a long hiatus in Tamil Nadu, the opening of schools and colleges came with enthusiasm

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
சென்னை,

நோய்த்தொற்று சற்று குறைந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு முதலில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் 9, 11-ம் வகுப்புகளுக்கும் வகுப்புகள் தொடங்கியது. நோய் பரவல் மீண்டும் தீவிரம் அடைந்தநிலையில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.


அதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கும், கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி முதல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்தன.

இந்தநிலையில் கொரோனா தீவிரமடைந்ததின் எதிரொலியாக கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் மீண்டும் கல்லூரிகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆன்-லைன் வகுப்புகள்

அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்-லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. எப்போதுமே மழை காலத்தில் மட்டுமே கிடைக்கும் ‘திடீர்’ விடுமுறையால் பள்ளிகள் மூடப்படும். மாணவர்களும் மனமும் அப்போது குதூகலம் அடையும். அதேபோல செல்போன் பயன்படுத்தினாலே ஆசிரியர்களின் கண்டனத்துக்கும் ஆளாக நேரிடும்.

இப்படிப்பட்ட சூழலில் இருந்த மாணவர்களுக்கு தொடர் விடுமுறையும், செல்போனிலேயே பாடம் கற்றுத்தரப்பட வேண்டிய சூழ்நிலையையும் கொரோனா உருவாக்கி வைத்திருந்தது. இதனால் மாணவர்கள் குதூகலமாக வீட்டிலேயே இருந்துவந்தனர். அதேவேளை வீட்டிலேயே சில மணி நேரம் ஆன்-லைன் வகுப்பில் எதை படித்து பிள்ளைகள் தேறுவார்கள்? என்ற கவலையிலும், எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் பெற்றோரும் இருந்து வந்தனர்.

பள்ளி-கல்லூரி திறப்பு

தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் வெளியான ஊரடங்கு தளர்வில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளும், 5 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளி வளாகங்களிலும் முழுமையான தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் நேற்று பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வந்தனர். சில வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளன.

முன்னதாக மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டும், கைகளில் கிருமிநாசினி (சானிடைசர்) தெளிக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைக்கு வந்ததிலும், சக நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்ததிலும் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சமூக இடைவெளியில் நேரடி வகுப்பில் பங்கேற்றனர்.

கல்லூரிகளில்...

அதேபோல கல்லூரிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு கல்லூரியை மீண்டும் மிதிப்பதில் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடனேயே காணப்பட்டனர். நண்பர்கள், பேராசிரியர்களை சந்தித்து மகிழ்ந்தனர். பள்ளிகளை போலவே கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் அதாவது திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவினரும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் ஒரு பிரிவினரும் என மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கல்லூரி வளாகம் அல்லது அருகேயுள்ள தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தவகையில் பள்ளி-கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டமாக சேராதவாறு பார்த்துக்கொள்ள அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு மற்றும் சுகாதார குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சீருடை அணிந்த மாணவர்கள்

பள்ளி-கல்லூரிகள் நீண்ட மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை பார்க்க முடிந்தது. பஸ்களிலும் மாணவர்களின் நடமாட்டத்தை வெகுநாட்களுக்கு பின்பு பார்க்க முடிந்தது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 100 பேர் கோஷம் எழுப்பியவாறு பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி, ராஜஸ்தான்

இதேபோல புதுச்சேரி, தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மாநிலங்களிலும் நேற்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டதோடு, கிருமிநாசினி தெளித்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து எல்லா நாளும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
கொரோனா பரவல் குறைந்த நிலையில் எல்லா நாட்களும் கோவில்களை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டதால் நேற்று அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன. அரசின் அறிவிப்பை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
2. நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம்
நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
3. கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு.
4. மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
5. நேபாளத்தில் 4.5 மாதங்களுக்கு பின் பசுபதிநாத் கோவில் திறப்பு
நேபாளத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், 4.5 மாதங்களுக்கு பின்பு பசுபதிநாத் கோவில் திறக்கப்பட்டு உள்ளது.