பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் தலைமைச் செயலாளர்


பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் தலைமைச் செயலாளர்
x
தினத்தந்தி 7 Sep 2021 5:32 PM GMT (Updated: 7 Sep 2021 5:32 PM GMT)

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறார். புகார் பெட்டியில் கூறப்படும் குறைகள், கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இறையன்பு
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றார். பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும் நிர்வாக ரீதியாக அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு. இவர் தமிழக தலைமைச் செயலாளராக பதவி ஏற்றதில் இருந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பரத்தை முற்றிலும் தவிர்த்து வருகிறார். ‘என்னை மகிழ்விப்பதற்காக, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ வாங்கி பரிசாக அளிக்கவேண்டாம்' என்று அரசு ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆய்வுக்காக மாவட்டங்களுக்கு வரும்போது, ஆடம்பர உணவுகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டாம் என்று கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தவர் இறையன்பு.

விளம்பர தட்டிகள் அகற்றம்
பொதுமக்கள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை மின்னல் வேகத்தில் நிறைவேற்றி, இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் இறையன்பு. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக விளம்பர தட்டிகள், பேனர்கள் இருப்பதாக இறையன்புவுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விளம்பர தட்டிகள், பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். இதன்பேரில் விளம்பர தட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

பாராட்டு மழை
திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஒரு குடும்பம் மின்சார இணைப்பு பெறுவதற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தது. இதை அறிந்த இறையன்பு துரித நடவடிக்கை மேற்கொண்டார். திருச்சி மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் சிலர் அந்த கிராமங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்த பாகுபாட்டை களைவதற்கும் அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். பொதுப்பணித்துறை தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் ஓய்வூதிய பணம் பெறுவதற்கு 13 வருடங்களாக போராடி வருவதாக இறையன்புவிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். அந்த நபருக்கு சில நாட்களிலேயே ஓய்வூதிய பணம் கிடைக்க இறையன்பு உரிய நடவடிக்கை எடுத்தார்.

இதுபோல ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் மக்கள் கூறும் குறைகள், கோரிக்கைகள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இறையன்பு எடுக்கும் நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Next Story