மாநில செய்திகள்

மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் + "||" + The ‘Need’ bill to prevent student suicide needs to be approved by the President soon

மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்

மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,

‘நீட்’ தேர்வு நடக்கும் நேரத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியாதோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்கு முந்தைய நாட்கள் தற்கொலை காலமாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு முந்தைய நாளில் 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்டனர். ‘நீட்’ தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ‘நீட்’ தேர்வால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது, அது குறித்து மத்திய- மாநில அரசுகள் ஆய்வு செய்து தீர்வு காண முன்வர வேண்டும். ஆனால் தீர்வு காணவேண்டிய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகவும் கவலை அளிக்கிறது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. அரசு சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்திருக்காது.

தற்போது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் புதியசட்டம் தமிழக சட்டசபையில் நாளை (இன்று) தாக்கல் செய்யப்படுகிறது. இதனை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும். அதற்கு அனைத்து வழிகளிலும் பா.ம.க. ஒத்துழைப்பு வழங்கும்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுசின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.