காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்


காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 13 Sep 2021 7:16 PM GMT (Updated: 13 Sep 2021 7:16 PM GMT)

தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

புதுச்சேரி
தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 
இந்தநிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைவாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன. 
அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன

காலாண்டு தேர்வு     அட்டவனை

இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை அவரவர் பெற்றோர்களின் செல்போன்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டு வருகிறது. 
அதன்படி நாளைமறுநாள் (15-ந்தேதி) தேர்வுகள் தொடங்கும் என்றும் தேதி வாரியாக பாடங்களுக்கான தேர்வுகள் குறித்த விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகளை இம்மாதம் (செப்டம்பர்) இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 மாணவர்கள், பெற்றோர் குழப்பம்

ஆனால் அதே நேரத்தில் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்பட்டவில்லை. 
இதுதொடர்பாக மாணவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு அதுபோன்ற அட்டவணை எதுவும் வரவில்லை என்று தெரிவித்தனர். இதுபற்றி உறுதி செய்வதற்காக பள்ளி கல்வித்துறை மற்றும் அரசு பள்ளி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, காலாண்டு தேர்வு தேதி மற்றும் அட்டவணை குறித்து எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தனர். 
தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு அரசு பள்ளிகளில் வெளியிடப்படாதால் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது. 

Next Story