நாடு முழுவதும் சாலைகளில் வாகனங்கள் 100 கி.மீ. வேகத்துக்குள் செல்ல வேண்டும்


நாடு முழுவதும் சாலைகளில் வாகனங்கள் 100 கி.மீ. வேகத்துக்குள் செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2021 8:01 PM GMT (Updated: 14 Sep 2021 8:01 PM GMT)

நாடு முழுவதும் வாகனங்கள் 60 முதல் 100 கி.மீ. வேகத்துக்குள் செல்லும் வகையில் மத்திய அரசு புதிதாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சாலையில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பல் டாக்டர் படுகாயம் அடைந்தார். அவருக்கு 90 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டது. இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர், அந்த பெண் டாக்டருக்கு கீழ் கோர்ட்டு நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையை ரூ.18.43 லட்சத்தில் இருந்து ரூ.1.49 கோடியாக உயர்த்தி வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

மேலும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

அதில், ‘‘இந்தியாவில் அதிவேக வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர்ப்பலி எண்ணிக்கையை குறைக்கும் வகையில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்திலும், நகர்ப்புற சாலைகளில் 70 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சாலைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, வாகனங்களின் என்ஜின் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாகனங்களுக்கான வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் என்.கிருபாகரன் (ஓய்வு), டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் கடந்த மாதம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் 6 பேர் விபத்துகளில் சிக்கி மரணமடைவதாக கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய ஆலோசகரான டாக்டர் பதஞ்சலி தேவ் நாயர் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 55 முதல் 57 கி.மீ. ஆக குறைத்தால் இந்தியாவில் 30 முதல் 37 சதவீதம் பேர் விபத்துகளில் சிக்கி மரணமடைவதை தவிர்க்க இயலும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிவேகத்தில் பயணம் செய்யும் அளவுக்கு இன்னும் சாலைகளின் கட்டமைப்போ அல்லது வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வோ ஏற்படவில்லை. எனவே இந்தியாவில் அதிவேக வாகனங்களால் ஏற்படும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக வாகனங்களின் வேகத்தை ஆரம்ப நிலையிலேயே குறைக்க வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் உலகில் தாங்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டுவதில் மிகச்சிறந்த திறமைசாலிகள் என மனதளவில் நினைத்துக்கொள்கின்றனர். அந்த சிந்தனையை அறவே வளரவிடக்கூடாது.

அதுபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் அதிவேக என்ஜின்களைக் கொண்டவை என்பதால், இந்தியாவில் உள்ள சாலைகளின் தரத்துக்கேற்ப அவற்றின் வேகத்தையும் குறைக்க வேண்டும்.

எனவே, வாகனங்கள் விரைவு சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும், 4 வழிச்சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்திலும், நகர்ப்புற சாலைகளில் 70 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்துள்ள அறிவிப்பாணையை ரத்து செய்கிறோம்.

கடந்த 2014-ம் ஆண்டு பிறப்பித்துள்ள அறிவிப்பாணையின்படி வாகனங்கள் 60 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்துக்கு உட்பட்டு செல்லும் வகையில் மத்திய அரசு புதிதாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். தமிழக அரசும் வேக கட்டுப்பாடு குறித்தும், அதிவேக வாகன விபத்துகளை தடுக்கும் வகையிலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story