வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நவம்பர் மாதம் 4 நாள் சிறப்பு முகாம் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நவம்பர் மாதம் 4 நாள் சிறப்பு முகாம் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2021 8:23 PM GMT (Updated: 14 Sep 2021 8:23 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக வரும் நவம்பர் மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

சென்னை,

இதுதொடர்பாக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (கலெக்டர்கள்) அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14-ந் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), 27 மற்றும் 28-ந் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

எனவே இந்த நாட்களில் முகாம்கள் நடத்தப்படுவது குறித்து அவரவர் மாவட்டங்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், இடமாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் போதுமான அளவில் வைக்கப்பட வேண்டும்.

சிறப்பு முகாம் நடக்கும் அந்த 4 நாட்களிலும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிறப்பு முகாம்களுக்கான பணிகளை செய்யும் போதும், சிறப்பு முகாம்கள் நடக்கும்போதும் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story