ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி


ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
x
தினத்தந்தி 14 Sep 2021 10:02 PM GMT (Updated: 14 Sep 2021 10:02 PM GMT)

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

சென்னை, 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தது. சட்டசபை தேர்தலில பா.ம.க சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில், இணைய வழியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15-ந் தேதி (இன்று), 16-ந் தேதி (நாளை) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story