அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் - கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு


அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் - கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு
x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

திருக்கோவில்களின் சார்பாக 10 புதிய கல்லூரிகள், ஒரு சித்த மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை குழுக்கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், மார்க்கண்டேயன், ஏ.பி.நந்தகுமார், பி.எஸ்.டி.சரவணன், துரைசந்திரசேகர், ஏ.சவுந்திரபாண்டியன், இ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வுக்கூட்டத்தில் சேகர்பாபு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மானிய கோரிக்கையின்போது துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்லூரி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம் கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பழனியில் சித்த மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியை சார்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கல்வியாளர்கள் கொண்டு குழு அமைத்து அடுத்த ஆண்டிற்குள் கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத்துறையில் முதன் முதலாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆலோசனையின்பேரில் கல்வி மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. கல்லூரி தொடங்குவதற்கான இடம் தேர்வு, உள்கட்டமைப்புகள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை மக்கள் நல பிரதிநிதிகள் துரிதப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) ரா.கண்ணன், கூடுதல் கமிஷனர் (விசாரணை) ந.திருமகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story