பா.ஜ.க. வேட்பாளராக செல்வகணபதி போட்டி


பா.ஜ.க. வேட்பாளராக செல்வகணபதி போட்டி
x
தினத்தந்தி 21 Sep 2021 7:36 PM GMT (Updated: 21 Sep 2021 7:36 PM GMT)

நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக செல்வகணபதி போட்டியிடுகிறார். அவர் இன்று(புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக செல்வகணபதி போட்டியிடுகிறார். அவர் இன்று(புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். 
எம்.பி. தேர்தல் 
நாடாளுமன்ற மேலவையின் புதுச்சேரி எம்.பி.யாக அ.தி.மு.க.வை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 6-ந்தேதி முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய எம்.பி.யை தேர்வு செய்ய அடுத்தமாதம் (அக்டோபர்) தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று (புதன்கிழமை) இறுதி நாளாகும். இதுவரை சுயேச்சைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 
பா.ஜ.க. அதிரடி 
மேலவை எம்.பி. பதவியை பெற ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் கடும் போட்டி ஏற்பட்டது. நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியை பா.ஜ.க.வினரை கொண்டு நிரப்பிக்கொண்டதால் மேலவை எம்.பி. பதவியை விட்டுத்தரக்கூடாது என்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த பதவியை பெறும் ஆசையுடன் முன்னாள் அமைச்சரான மல்லாடிகிருஷ்ணாராவும் அடிக்கடி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசி வந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்தில் மேலவை எம்.பி. பதவிக்கு பா.ஜ.க. போட்டியிடுவது என்று அதிரடி முடிவினை எடுத்தனர். அந்த முடிவுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்தார். 
ரங்கசாமி அதிர்ச்சி 
பா.ஜ.க.வினரின் இந்த முடிவு முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அதிர்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மேலிடத்திடம் நேரடியாக பேச முடிவு செய்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, முக்கிய பிரமுகர் ஒருவர் வாயிலாக பா.ஜ.க. மேலிடத்தை தொடர்புகொண்டார். அப்போது பா.ஜ.க. மேலிடமும் எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.தான் போட்டியிடும், நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. 
இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ரங்கசாமி கருத்துகேட்டார். அப்போது அவர்கள் எம்.பி. பதவியை பா.ஜ.க.வுக்கு தரக்கூடாது என்று தெரிவித்தனர். அவர்களிடம் தற்போதைய அரசியல் நிலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி விளக்கினார்.
மேலிடம் உறுதி 
இருந்த போதிலும் தனக்கு ஆதரவாக இருப்பவர்கள் சிலரது பெயரை எம்.பி. பதவிக்கு பா.ஜ.க.விடம் சிபாரிசு செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முயற்சி எடுத்தார். அதாவது கடந்த முறை என்.ஆர்.காங்கிரசில் இருந்த கோகுலகிருஷ்ணனை கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு அனுப்பி எம்.பி.யாக்கியது போல் பா.ஜ.க. மேலிடத்தை தொடர்பு கொள்ள முயன்றார்.
இதற்காக பா.ஜ.க. மேலிடத்துடன் தொடர்புடைய முக்கிய பிரமுகரை சந்தித்து பேசினார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெற்றதாக தெரியவில்லை. மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் தான் போட்டியிடுவார் என்று உறுதியாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
செல்வகணபதி 
இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் மேலவை எம்.பி. வேட்பாளராக பா.ஜ.க.வை சேர்ந்த செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பா.ஜ.க. தலைமை அலுவலக பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான அருண் சிங் நேற்று வெளியிட்டுள்ளார். 
இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக செல்வகணபதி போட்டியிடுகிறார். அவர் இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். செல்வகணபதி பா.ஜ.க.வின் புதுவை மாநில பொருளாளராக உள்ளார். அவர் ஏற்கனவே கடந்த ஆட்சியில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார். சிறந்த கல்வியாளர்.  

Next Story