“அறுவைசிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றெடுப்பது தவறு” கர்ப்பிணிகளுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை


“அறுவைசிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றெடுப்பது தவறு” கர்ப்பிணிகளுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை
x
தினத்தந்தி 22 Sep 2021 10:20 PM GMT (Updated: 22 Sep 2021 10:20 PM GMT)

விரும்பிய நாள், நேரத்தில் அறுவைசிகிச்சை மூலமாக முன்கூட்டியே குழந்தையை பெற்றெடுப்பது தவறு என்று கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

நினைத்த நேரத்தில்...

சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவுப்புகளை செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் முழுமையான கவனம் செலுத்துவதை முதல்-அமைச்சர் இலக்காக கொண்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தாய்ப்பாலூட்டும் அறைகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நினைத்த நாள், நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கின்றனர். இது தவறானது. அந்தவகையில் விரும்பிய நாள், விரும்பிய நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பே குழந்தையை பெற்றெடுக்கும்போது, குழந்தையின் வளர்ச்சியில் சிறு குறைபாடு ஏற்படும். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வாய்ப்பு இல்லை.

சுகப்பிரசவம்

குழந்தையை முழுமையாக வளரவிட்டு சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். எனவே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதி, நேரத்தில் குழந்தையை பெற்றுக்கொள்ளும் முடிவை பெண்கள் கைவிட வேண்டும். குழந்தை இயற்கையாக பிறக்கும் வரை காத்திருந்து சுகப்பிரசவத்துக்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Next Story