சென்னையில் 32 நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின


சென்னையில் 32 நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின
x
தினத்தந்தி 23 Sep 2021 11:48 PM GMT (Updated: 23 Sep 2021 11:48 PM GMT)

சென்னையில் வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததை தொடர்ந்து 32 நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கின.

சென்னை,

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமானவரித்துறை, வரி ஏய்ப்பு புகாரின்பேரில் கடந்த சில நாட்களாகவே டெல்லி, அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, சென்னையில் நிதிநிறுவனம் நடத்தி வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னை புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை உள்பட 32 நிதிநிறுவனங்களில் 150-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் சிக்கின

இதுகுறித்து வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் சிறிய நிதி நிறுவனம் நடத்துவோரிடம் ஹவாலா பணப்புழக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அந்த புகார் களின் அடிப்படையில் 32-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. அதில் வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் எவ்வளவு என்பன போன்ற முழுமையான விவரங்கள் சோதனை முடிந்த பின்னர் தான் தெரியவரும் தற்போது கூற இயலாது. சோதனை தேவைப்பட்டால் தொடரவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story