மாநில செய்திகள்

ரூ.2 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள் + "||" + Sri Lankan pirates loot Rs 2 lakh worth of goods

ரூ.2 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்

ரூ.2 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கி ரூ.2 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து நடைபெறும் இந்த அட்டூழியத்தை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றி வளைத்து தாக்கினர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை சுனாமி நகரை சேர்ந்த சின்னதம்பி மகன் சிவக்குமார்(வயது 32) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அவருடைய தந்தை சின்னதம்பி, அண்ணன் சிவா(33) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வேதாரண்யத்துக்கு கிழக்கே 15 நாட்டிகல் மைல் தொலைவில் வலைவிரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இரவு 10 மணி அளவில் அங்கு 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தி, கட்டை, இரும்பு பைப்புகளுடன் மீனவர்களின் படகில் ஏறி அவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் சிவக்குமாருக்கு தலையில் வெட்டு காயமும், சின்னத்தம்பிக்கு இடது கண்ணுக்கு கீழே காயமும், சிவாவிற்கு உள்காயமும் ஏற்பட்டது. மேலும் படகில் இருந்த 400 கிலோ வலை, டார்ச் லைட், சிக்னல் லைட், வாக்கி-டாக்கி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தாங்கள் வந்த படகில் ஏறி சென்றனர்.

கலெக்டர் ஆறுதல்

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 3 மீனவர்களும் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கரை திரும்பினர். பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றதை கண்டித்து நேற்று ஆறுக்காட்டுதுறை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிவக்குமார், கடந்த 1-ந்தேதி மீன்பிடிக்க சென்றபோது அவரை மிரட்டி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட முறை மீனவர்களை தாக்கி வலை மற்றும் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தொடர் கதையாக நடந்து வரும் இலங்கை கடற்கொள்ளையர்களால் ஆறுக்காட்டுதுறை மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்பு; மீனவர்கள் வேலை நிறுத்தம்
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக கூறி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.