நீதிபதி காரை தடுப்பு போட்டு மறித்ததுபோல முதல்-அமைச்சர், அமைச்சர்களின் கார்களை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? ஐகோர்ட்டு கேள்வி


நீதிபதி காரை தடுப்பு போட்டு மறித்ததுபோல முதல்-அமைச்சர், அமைச்சர்களின் கார்களை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 1 Oct 2021 11:36 PM GMT (Updated: 1 Oct 2021 11:36 PM GMT)

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக நீதிபதியின் காரை தடுப்பு போட்டு மறித்ததுபோல, முதல்-அமைச்சர், அமைச்சர்களின் கார்களை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

நடிகர் சிவாஜிகணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அங்குள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்-அமைச்சர் வருகையால் நேற்று காலை அடையாறு பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர். அதில் ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் காலதாமதமாக ஐகோர்ட்டுக்கு வந்தார். போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, தமிழக உள்துறை செயலாளரை ஆன்லைன் வாயிலாக பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டார்.

அதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்கு தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் ஆன்லைன் வாயிலாக ஐகோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பி பேசியதாவது:-

நிகழ்ச்சி குறித்து காலை 9.30 மணிக்குத்தான் தகவல் தெரியும். உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை தொடர்புகொண்டு, காலையில் ஐகோர்ட்டுக்கு போகும்போது வாகனம் மறிக்கப்படக்கூடாது என்பது என் நேரடி உதவியாளர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்னுடைய கார் மறிக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள் பலவற்றை போட்டு சாலையை மறித்துள்ளனர். இதனால் 25 நிமிடங்கள் காலதாமதத்துடன் ஐகோர்ட்டுக்கு வந்துள்ளேன். பொது ஊழியரான என்னை பணி செய்யவிடாமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

என் வாகனத்தை மறித்தது போல, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் காரை போலீசாரால் மறிக்க முடியுமா? போலீசாரின் இந்தச் செயல், கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். இதற்காக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை.

ஐகோர்ட்டின் பலத்தைக் காட்ட உங்களை வரவழைக்கவில்லை. யார் மீதும் குற்றம்சாட்டவும் விரும்பவில்லை. இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது. முதல்-அமைச்சர், அமைச்சர்களை எப்படி போலீசார் நடத்துகின்றனரோ, அதுபோல நீதிபதிகளையும் நடத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

அதையடுத்து உள்துறை செயலாளர் பிரபாகர், ‘நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை செய்ய உள்ளேன். இனி எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதை உறுதி அளிக்கிறேன்’ என்றார்.

Next Story