லாலாபேட்டை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை


லாலாபேட்டை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2021 6:33 PM GMT (Updated: 6 Oct 2021 6:33 PM GMT)

லாலாபேட்டை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும், தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

லாலாபேட்டை, 
பிரபல ரவுடி வெட்டிக்கொலை
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 52), தேவேந்திரகுல கூட்டமைப்பை சேர்ந்தவர். பசுபதிபாண்டியனின் தீவிர ஆதவாளர் ஆவார். மேலும் அப்பகுதியில் பிரபல ரவுடியாகவும் வலம் வந்துள்ளார்.
இவரது வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் விவசாயத்தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கோபாலகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது வாழைத்தோப்பில் மறைந்திருந்த மர்ம ஆசாமிகள் அவரை சுற்றிவளைத்து கால், தோள்பட்டை, தலை, முகம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வயலில் சரிந்து விழுந்து கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இதையடுத்து, மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். விடிந்ததும் அந்த வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள் கோபாலகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் குவிப்பு
இதனைதொடர்ந்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், கீதாஞ்சலி, குளித்தலை துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் கொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.
கரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து வாழை தோப்பில் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கருப்பத்தூர் கிராமத்தில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு வெடிகுண்டு
மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மீது பல்வேறு மாவட்டங்களில் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு கருப்பத்தூர் தோப்பில் கோபாலகிருஷ்ணன் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது சதி திட்டம் தீட்ட குண்டு தயாரித்ததாக அப்போது அந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது.
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனுக்கு பொன்மணி என்ற மனைவியும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே கோபாலகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பத்தூரில் சாலை மறியலுக்கு முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story