விழிப்போடு இருப்போம்!! மார்பக புற்றுநோயை வென்றிடுவோம்!!!


விழிப்போடு இருப்போம்!! மார்பக புற்றுநோயை வென்றிடுவோம்!!!
x
தினத்தந்தி 10 Oct 2021 4:49 AM GMT (Updated: 2021-10-10T10:19:08+05:30)

இந்திய பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரை மார்பகப் புற்றுநோயினாலேயே பாதிக்கப்படுகின்றனர்.

ந்திய பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரை மார்பகப் புற்றுநோயினாலேயே பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு மார்பகப்புற்றுநோய் கண்டுபிடிக்கப் படுவதும் இதில் ஒவ்வொரு 13 நிமிடத்திற்கு ஒருவர் மார்பகப் புற்றுநோயினால் இறப்பதும் இந்தியாவில் நடக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களில் 20 - 30 வயதுடைய பெண்களுக்கு 2%, 30 - 40 வயதுடைய பெண்களுக்கு 7%, 40 - 50 வயதுடைய பெண்களுக்கு 16% என்று இருந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு புள்ளிவிவரம் தற்பொழுது, 2%, 7%,16% என்பது முறையே 4%, 16%, 28% என உயர்ந்துள்ளது. இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் 48% மார்பக புற்றுநோய், 50 வயதுக்கு குறைவான பெண்களுக்கே வருகிறது என்பதாகும்., 50 சதவிகிதத்திற்கு அதிகமான, இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள், நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகிறார்கள். மார்பகப் புற்றுநோய் பொருத்தவரை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் முறையான சிகிச்சை கொடுத்து குறைவான காலத்தில் குறைவான செலவில் முழுமையான நலத்தை கொடுக்க முடியும்.

மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள்
 • மரபணு சடுதி மாற்றம் நியூட்ரிசன்
 • 12 வயதிற்கு முன்பாக பூப்பெய்தலும் 55 வயதிற்கு மேற்பட்டும் மாதவிடாய் நிற்காமல் இருப்பதும்.
 • குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்களும் 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகம். குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வயது வரை பால் கொடுப்பது புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு குறைக்க உதவும்.
 • அழுத்தமான மார்பகங்கள் உடைய பெண்கள்
 • அழுத்தமான மார்பகங்களில் கொழுப்பு திசுக்களை விட தசை திசுக்கள் அதிகமிருப்பதால் சிறு கட்டிகளை மேமோகிராம் மூலம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
 • ஏற்கனவே மார்பகப் புற்றுநோய் இருந்தது, புற்றுநோய் தவிர வேறு கட்டிகள் இருந்ததும் இரண்டாம் முறையாக புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும்.
 • குடும்பத்தில் யாருக்கேனும் தாய்க்கோ சகோதரிகோ, தன் மகளுக்கோ குடும்பத்தில் நெருங்கிய உறவினருக்கோ புற்று நோய் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
 • முப்பது வயதிற்கு முன்பாக ஏதேனும் கட்டி அல்லது மார்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

தவிர்க்கக் கூடிய காரணிகள்
 • உடல் எடையை சரியாக பராமரிப்பது
 • உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு போதுமான அளவிற்கு செய்வது.
 • சத்துள்ள ஆகாரம் எடுப்பதும், மது மற்றும் புகை பிடித்தலை தவிர்ப்பது.
 • குழந்தைக்கு பாலூட்டுவது
 • கர்ப்பத்தடை மாத்திரைகளை தவிர்ப்பது
சுய மார்பக பரிசோதனை
பெண்கள் அனைவருமே மாதவிடாய் முடிந்து 4 முதல் 5 நாட்களுக்கு பிறகு தங்களுடைய மார்பகங்களை சுயமாய் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

மேமோகிராம்
மேமோகிராம் மூலம் மார்பக பரிசோதனை செய்துகொள்வது புற்று நோய் இருக்கும் பட்சத்தில் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்க உதவும். எனவே 40 முதல் 44 வயது உடைய பெண்கள் முடிந்தவரை ஓர் ஆண்டிற்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது. 45 முதல் 54 வயது உடைய பெண்கள் ஒவ்வொரு வருடமும் மேமோகிராம் எடுத்துக் கொள்வது அவசியம். 55 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேமோகிராம் பரிசோதனையை மாதவிடாய் முடிந்த ஓரிரு வாரங்களுக்கு பிறகு செய்து கொள்வது நல்லது. மேமோகிராம் எடுக்க செல்லும் பொழுது பவுடர் பெர்ஃப்யூம் சென்ட் போன்றவற்றை அணிந்து கொள்ளாமல் செல்வது உகந்தது.

மேமோகிராம் எப்படி வேலை செய்கிறது
மார்பக திசுக்களை துல்லியமாக எக்ஸ்ரே மூலம் ஊடுருவி, அங்கு இருக்கக்கூடிய மாறுபாடுகளை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மார்பக திசுக்களை தட்டையாக அழுத்தி குறைவான எக்ஸ்ரே கதிர்வீச்சுகளை அனுப்பி மார்பகத்தின் எல்லா பகுதிகளையும், தேவைப்பட்டால் சில பகுதிகளை பெரிது படுத்தியும் மேமோகிராமில் படம்பிடித்து பார்க்க முடியும். மேமோகிராமிலிருந்து இருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகள் மார்பகங்களை பாதிக்கலாம் என்ற கருத்து இருந்தாலும் அந்த கதிர்வீச்சின் அளவு மிகமிகக் குறைவு என்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை விட மேமோகிராம் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகம்.

மார்பக புற்றுநோய் சுலபமாக குணப்படுத்தக்கூடிய ஒன்று என்றாலும் அதை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிடுவதால் அதன் பாதிப்பு இந்தியப் பெண்களில் அதிக இறப்பிற்கு காரணமாக இருக்கிறது. எனவே பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அதனை சுலபமாக எதிர்கொள்ள முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை தெரிந்து வைத்திருப்பது, மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வது, தவறாமல் அவ்வப்போது மேமோகிராம் எடுத்துக்கொள்வது போன்றவை மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க உதவும். எனவே பெண்களே விழிப்போடு இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.

Next Story