திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருக்குடைகள் சமர்ப்பணம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருக்குடைகள் சமர்ப்பணம்
x
தினத்தந்தி 10 Oct 2021 8:49 PM GMT (Updated: 10 Oct 2021 8:49 PM GMT)

திருமலை ஏழுமலையான் கோவிலில் திருப்பதி திருக்குடைகளை ஆர்.ஆர்.கோபால்ஜி சமர்ப்பித்தார்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலைகள், திருப்பதி திருக்குடைகள் என்று 2 வகையான மங்கலப்பொருட்கள், ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சாமிக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.தமிழகத்தில் இருந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பெருமாள் எழுந்தருளும்போது, ஆதிசேஷனே திருக்குடையாக அவதரிக்கிறார் என்பது ஐதீகம்.

திருப்பதிக்கு வந்தன
திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது தமிழக பக்தர்கள் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி, ஆண்டுதோறும் 11 திருக்குடைகளை சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை உற்சவம் கடந்த 3-ந்தேதி பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் யாக பூஜைகளுடன் தொடங்கியது. அதன்பின் சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருக்குடைகளுக்கு 5-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் திருப்பதிக்கு திருக்குடைகள் வந்து சேர்ந்தன. அதில் 2 திருக்குடைகள் தாயார் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன.

சமர்ப்பிப்பு
இந்த நிலையில் நேற்று காலை திருமலையில் ஏழுமலையான் கோவில்முன் 9 அழகிய திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டி ஆகியோரிடம் சமர்ப்பித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் உடனிருந்தார்.

பின்னர் நிருபர்களிடம் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-

நீண்டகால நடைமுறை
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருக்குடைகளை எடுத்துவந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்வதும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலைகளை எடுத்துவந்து திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்வதும் நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் ஆகும். பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் காணப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருப்பதை பார்க்கும்போது மனதில் ஒருவிதமான நெருடல் ஏற்படுகிறது.

நன்கொடை வசூல் இல்லை
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பிரமாண்ட அளவில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடக்கும். அதில், அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரும் திருக்குடைகளை சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருக்குடை ஊர்வலம் நடைபெறவில்லை. இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், எந்தவித நன்கொடையும் வசூல் செய்யாமல் திருப்பதியில் திருக்குடைகள் சமர்ப்பணத்தை நடத்திவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
அதைத் தொடர்ந்து நிருபர் ஒருவர் அவரிடம், ‘தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்கள் மூடப்பட்டு இருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘இந்த விஷயத்தில் அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகள் பவனிவர, திருமலையில் கருட சேவை உற்சவம் இன்று (திங்கட்கிழமை) இரவு நடக்கிறது.


Next Story