ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல், பூஜை பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்


ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல், பூஜை பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 12 Oct 2021 9:24 PM GMT (Updated: 12 Oct 2021 9:24 PM GMT)

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அலங்கார பொருட்களும் அதிக அளவில் விற்பனை ஆனது.

சென்னை,

ஆயுத பூஜை தினத்தன்று வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜை நடத்தி இறைவனை மக்கள் வழிபடுவார்கள். இதையொட்டி பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் முன்னரே பூஜைக்கான பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் ஆயுதபூஜை பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கடைவீதிகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

சென்னையில் கோயம்பேடு, பாரிமுனை, புரசைவாக்கம், தியாகராயநகர், கோடம்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கடைவீதிகள் நிறைந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு படி பொரி ரூ.10 முதல் ரூ.15-க்கும், அவல்-கடலை கலந்த பொரி பாக்கெட் ரூ.20 முதல் ரூ.25 வரையிலும் விற்பனை ஆகிறது. இதேபோல பொரிகடலை, வேர்க்கடலை, வெல்லம் உள்ளிட்டவைகளும் பாக்கெட்களாகவே விற்பனை செய்யப்பட்டது.

அத்துடன் சந்தனம், குங்குமம், கற்பூரம், வெள்ளை பூசணி உள்ளிட்ட பூஜைக்கான பொருட்களும், காய்கறி-பழ வகைகளும் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை பொதுமக்கள் மும்முரமாக வாங்கி சென்றனர்.

அலங்கார பொருட்கள் விற்பனை

அதேபோல ஆயுத பூஜை தினத்தன்று தொழில் நிறுவனங்களை அழகூட்டும் அலங்கார பொருட்கள் விற்பனையும் ஜோராக நடந்தது. அந்த வகையில் தோரணங்கள், வாழ்த்து அட்டைகள், பூஜை பொருட்களுக்கான பைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் அள்ளி சென்றனர்.

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கடைவீதிகளில் புதிய வியாபாரிகளும் அதிக அளவில் கடைவிரித்துள்ளனர். அதேபோல பூக்கடைகளும் அதிக அளவில் முளைத்திருக்கின்றன. பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் இன்று பூஜை பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Next Story