இடஒதுக்கீட்டை திரும்பப் பெற்றதில் உள்நோக்கம் இல்லை கவர்னர் தமிழிசை விளக்கம்


இடஒதுக்கீட்டை திரும்பப் பெற்றதில்    உள்நோக்கம் இல்லை கவர்னர் தமிழிசை  விளக்கம்
x
தினத்தந்தி 13 Oct 2021 3:53 PM GMT (Updated: 13 Oct 2021 3:53 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி
உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தடுப்பூசி முகாம்

புதுவை ஞானதியாகு நகர் சமுதாயக்கூடத்தில்  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். 
இதில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ.,  சுகாதாரத்துறை இயக்குனர்         டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமின்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மன்னிக்க முடியாத குற்றம்

புதுவையில் சுமார் 80 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 35 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். தற்போது பாதிப்பு குறைந்து வருவதனால் தடுப்பூசி ஏன் செலுத்திக்கொள்ள வேண்டும்? என்று மக்கள் நினைக்கின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் பாதிப்பு குறைந்துள்ளது.
இப்போதுதான் சிலர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்துகின்றனர்.     மக்களிடம் இன்னும்  விழிப்புணர்வு தேவை. தடுப்பூசி போடாமல் தொற்றை ஏற்படுத்தினால் அது மன்னிக்க   முடியாத குற்றமாக கருதுகிறேன்.

அடிப்படை கட்டமைப்பு

உலகிலேயே முதன் முதலாக 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அங்கீகாரம் பெற்று மத்திய அரசால் ஒப்புதலும் பெற்றுள்ளோம். நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி, 18 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
புதுவையில் மழைக்காலங்களில் சேதம் ஏற்படுவதை தடுக்க அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்யவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர மேம்பாட்டு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்யலாம்.    இது தொடர்பான கோப்புகளுக்கு     உடனே அனுமதி அளிக்கப்படுகிறது.

உள்நோக்கம் இல்லை

உள்ளாட்சி தேர்தலில் பிற் படுத்தப்பட்ட,   பழங்குடியின மக்களுக்கு   வழங்கிய  இட ஒதுக்கீடு, திரும்ப பெறப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. ஏனெனில் நானும் பிற்படுத்தப்பட்ட     வகுப்பினை     சேர்ந்தவர்தான். அதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தேர்தல் நடத்த கூறியது. எனவே அதற்கான கால அவகாசம் இல்லை. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்படுவது இல்லை. அதற்கான கணக்கெடுப்பும் நம்மிடம் இல்லை. சட்ட சிக்கல் காரணமாகத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
இடஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். முதல்-அமைச்சருடன் கலந்து பேசி உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும். மாநில தேர்தல் ஆணையர் தொடர்பாகவும் சில கோரிக்கைகள் வந்துள்ளன. ஜனநாயகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற   இரண்டும் வேண்டும். குற்றச்சாட்டுகள் தொடர்பாக அலசி ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story