அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை


அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 14 Oct 2021 12:04 AM GMT (Updated: 14 Oct 2021 12:04 AM GMT)

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொது வினியோகத் திட்டத்தில் பொருட்கள் வழங்குவதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திவரும் நிலையில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்களுக்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பொது வினியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாற்றம் இல்லை

மிகவும் சிறப்பாக செயல்பட்டுவரும் அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது என்றும், இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது வினியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்றுவரும் அனைத்து பொருட்களையும் தொடர்ந்து பெறலாம் என தெளிவுபடுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிவரும் இது குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story