தொழில் போட்டியில் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையா? 3 பேருக்கு வலைவீச்சு


தொழில் போட்டியில் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையா? 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Oct 2021 10:14 PM GMT (Updated: 16 Oct 2021 10:14 PM GMT)

சேலத்தில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட அழகு நிலைய பெண் உரிமையாளர் பாலியல் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தேஜ்மண்டல் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர், சேலம் பள்ளப்பட்டி, சங்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அழகு நிலையம், மசாஜ் சென்டர்களை நடத்தி வந்துள்ளார். குமாரசாமிப்பட்டியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்மண்டல் 2 வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளார். ஒரு வீட்டில் அவரும், மற்றொரு வீட்டில் தனது அழகு நிலையத்தில் வேலை பார்த்த 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோரும் தங்கி இருந்தனர். பிரதாப் என்கிற முகமது சதான் என்பவரை தனது கணவர் எனக்கூறிக்கொண்டு தேஜ்மண்டல் தங்கியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் பிரதாப், வீட்டு உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது மனைவி தேஜ்மண்டல் போனை எடுக்கவில்லை. இதனால் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நடேசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்ததுடன் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அவர், அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையின் சிலாப்பில் இருந்த சூட்கேசில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அரைகுறை ஆடையுடன் காணப்பட்ட அவரது கை, கால்கள் சேலையால் கட்டப்பட்டிருந்தன.

அழுகிய நிலையில் உடல் காணப்பட்டதால் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் பிரதாப், தேஜ்மண்டலின் கணவர் இல்லை என்பதும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அவர் அடிக்கடி தேஜ்மண்டல் வீட்டுக்கு வந்து சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து பிரதாப்பை போலீசார் சேலம் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர், காதலர்களான நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கு வேலை கிடைத்ததால் சென்னைக்கு சென்று விட்டேன் என கூறியதாக தெரிகிறது.

இதனிடையே, தேஜ்மண்டல் தனது வீட்டின் அருகே குடி வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரும் தலைமறைவானது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.

இரு ஒருபுறம் இருக்க, கொலையுண்ட தேஜ்மண்டலுக்கு பள்ளப்பட்டியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கைதான நபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலியல் தொழில் போட்டியால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story