காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை


காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Oct 2021 7:18 PM GMT (Updated: 19 Oct 2021 7:18 PM GMT)

கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கன் (வயது 31). கொத்தனார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27). இவர்களுக்கு 8 வயதிலும், 6 வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதியை சேர்ந்த முத்துமணி என்பவரின் மகன் விஜய்யுடன் (23) அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலானது.

திருமணத்தை மறைத்தார்

ஐஸ்வர்யா தனக்கு திருமணமானதையும், 2 குழந்தைகள் உள்ளதையும் மறைத்து தன்னைவிட 4 வயது இளையவரான விஜய்யிடம் பழகி வந்துள்ளார். இவ்வாறு 4 ஆண்டுகளாக இவர்களின் காதல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் விஜய் மீதான காதல் எல்லை மீறி போகவே, தனது 2 பெண் குழந்தைகள், கணவரையும் விட்டுவிட்டு விஜய்யை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி ஐஸ்வர்யா ராமநாதபுரம் சென்றார்.

திருமண ஏற்பாடு

ஏற்கனவே தனது காதல் குறித்து தெரிவித்திருந்ததால் காதல் ஜோடியை சேர்த்து வைக்க விஜய்யின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். கோவிலில் திருமணம் செய்து வைத்துவிட்டு, அதனை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஐஸ்வர்யாவிடம் ஆதார் அட்டையை கேட்டபோது அவர் திகைத்துள்ளார். ஆதார் அட்டையை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா இனியும் மறைக்க முடியாது என்று தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளதை தெரிவித்து, தற்போது விஜய்யுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்டு விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள விஜய் மறுத்துவிட்டார்.

கணவருடன் செல்ல மறுப்பு

பின்னர் ஐஸ்வர்யாவின் கணவர் செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெங்கன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார். ஆனால், ஐஸ்வர்யா கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அனைவரும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கணவன்-மனைவி இருவரையும் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதன்படி போலீசார் நேற்று காலை வருவதாக தெரிவித்ததால் நேற்று முன்தினம் இரவில் பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணி, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஐஸ்வர்யாவை தங்கவைத்தனர்.

தற்கொலை

காதலை ஏற்க மறுத்த விரக்தியில் இருந்த ஐஸ்வர்யா நேற்று அதிகாலை 5 மணியளவில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று திடீரென அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Next Story