உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 12:50 AM GMT (Updated: 20 Oct 2021 12:50 AM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்தது. இதேபோல், ஏனைய 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத மற்றும் காலியிட பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் கடந்த 9-ந்தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் கடந்த 12-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பதவி பிராமணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்து இருக்கிறது.

அவ்வாறு பதவி ஏற்றவர்கள் மட்டுமே நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பங்களிக்கவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story