மின் வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்


மின் வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்
x
தினத்தந்தி 22 Oct 2021 7:26 PM GMT (Updated: 22 Oct 2021 7:26 PM GMT)

மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அருண்சிங், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அதன்பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும்பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கென சொந்த அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. திருப்பூரில் கட்டப்பட்டு வரும் அலுவலகம் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

மன்னிப்பு கேட்க முடியாது

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தந்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் இங்கிருந்தபடி ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.

மேலும் மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு மன்னிப்பு கேட்கக்கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது. வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்ளவும் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story