முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி


முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 23 Oct 2021 2:35 PM GMT (Updated: 23 Oct 2021 2:35 PM GMT)

கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் ரமேஷ்க்கு ஜாமீன் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடலூர்,

பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ், கடந்த செப்டம்பர் மாதம்19-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து, அவரது மகன் செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், கடந்த 9-ம் தேதியன்று எம்.பி. ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து எம்.பி. ரமேஷ் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சரணடைந்தார். அவரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டா். 

இதற்கிடையில், எம்.பி. சாா்பில் ஜாமீன் கேட்டு  மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் ரமேஷ்க்கு ஜாமீன் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story