இந்து கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு தகவல்


இந்து கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:10 PM GMT (Updated: 29 Oct 2021 11:10 PM GMT)

இந்து கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை சூளையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சொக்கவேல் சுப்பிரமணியசாமி கோவில், சீனிவாசபெருமாள் கோவில் ஆகிய கோவில்களின் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை கமிஷனர் ஹரிப்பிரியா, நிர்வாக அலுவலர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 300-க்கும் மேற்பட்ட முதுநிலை கோவில்களில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதுநிலை இல்லாத கோவில்களில் ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளோம். முதல்-அமைச்சர் பெரிய, சிறிய கோவில்கள் என்ற பாகுபாடில்லாமல் பக்தர்களின் நலனுக்காக அனைத்து கோவில்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. நிச்சயம் மக்களின் பேராதரவுடன் தி.மு.க. ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிச்சயம் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோவிலுக்குச் சொந்தமான நகைகளை கணக்கிடும் பணியை முதல்-அமைச்சர் கடந்த 13-ந் தேதி திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய கோவில்களில் தொடங்கி வைத்தார். தற்போது நீதிபதிகள் முன்னிலையில் கோவில் நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. கோர்ட்டு உத்தரவை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு முன்பாகவே மாவட்ட அளவிலான மற்றும் ஒவ்வொரு கோவில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியில் உள்ள யாரையும் நீக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் கட்சிப் பாகுபாடின்றி அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

ஒரு சில இடங்களில் நிர்வாக வசதிக்காகவும், நிதிச் சுமை காரணமாகவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போராட்டம் நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்பட சிலர் கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றதாகவும், ஆனால் முதல் பந்தியில் அமரக்கூடாது மற்றும் உணவு இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டதாகவும், குற்றச்சாட்டு தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

இந்தநிலையில், தலசயன பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் உள்பட பொதுமக்களுடன் கோவில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சேகர்பாபு சாப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது:-

நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் பக்கத்தில் தலசயன பெருமாள் கோவிலில் பந்தியில் அன்னதானம் வழங்க மறுத்ததாக தெரிவித்திருந்தார். இந்த தகவல், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அப்பெண் உள்பட அனைவருடன் கோவில் வளாகத்தில் அமர்ந்து உணவருந்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story