சென்னை போலீசார் சார்பில் 13 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு


சென்னை போலீசார் சார்பில் 13 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 7 Nov 2021 9:22 PM GMT (Updated: 7 Nov 2021 9:22 PM GMT)

மழைவெள்ள மீட்பு நடவடிக்கையில் ஈடுபட சென்னை போலீசார் சார்பில் 13 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு.

சென்னை,

சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் ஆறு போன்று மாறியது. இதனால் மக்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டது. மழைவெள்ள மீட்பு நடவடிக்கைகளில் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புபடை வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சென்னை போலீஸ்துறை சார்பிலும் 13 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் பெற்ற 10 போலீசார் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெற்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகுகள், கயிறுகளும், சாலையில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கான உபகரணங்களும், மருத்துவ முதலுதவி பெட்டிகளும் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டது.

இந்த மீட்பு குழுவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்புகளுக்கு ஏற்ப மீட்பு குழுவினர் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மீட்பு குழுவினரை சந்தித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை பார்வையிட்டு, மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாகவும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அறிவுரையையும், ஆலோசனையையும் வழங்கினார். அப்போது சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர்கள் சவுந்தரராஜன், கோபால் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story