வடிகால் கட்டமைப்புகளை சரிசெய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது பா.ஜ.க. குற்றச்சாட்டு


வடிகால் கட்டமைப்புகளை சரிசெய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Nov 2021 9:03 PM GMT (Updated: 14 Nov 2021 9:03 PM GMT)

வடிகால் கட்டமைப்புகளை சரிசெய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மண்டல அளவிலான தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.சம்பத், காயத்ரிதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வரவேற்பு

இந்த கூட்டத்துக்கு பின்னர் சி.டி.ரவி, கே.அண்ணாமலை ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநில அரசு குறிப்பாக 2016-17-ம் ஆண்டில் இருந்து வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும். மழை வெள்ள பாதிப்பு போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது வரவேற்கவேண்டிய விஷயம்.

மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பா.ஜ.க. சார்பிலும் ஒரு குழுவை நியமித்துள்ளோம். அதில் வல்லுனர்கள், ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் பணியாற்றியவர்களையும் இணைத்து எங்கள் சார்பிலும் கோரிக்கைகளை அரசுக்கு கொண்டுசெல்வோம்.

தி.மு.க. அரசு தவறிவிட்டது

பொதுவாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மாநில அரசு முழுமையாக வடிகால் கட்டமைப்புகளை சரிசெய்து மழை வெள்ளம் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த முறை தி.மு.க. அரசு அதை செய்ய தவறிவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் தமிழக மழை வெள்ள நிலவரத்தை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழை வெள்ள பாதிப்பு தொடர் பான தகவல்களை மத்திய அரசிடம் கொண்டு சென்றிருக்கிறார். அடுத்த சில நாட்களில் எல்.முருகன், அண்ணா மலை ஆகியோர் தென்தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிவாரணம்

அதையடுத்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறும்போது, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நாளை (இன்று) முடிவடைகிறது. இதை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

சி.டி.ரவி கூறுகையில், ஜே.பி.நட்டா வருகிற 24-ந் தேதி கோவை வருகிறார். அங்கிருந்து திருப்பூருக்கு செல்லும் அவர் அங்கு பா.ஜ.க. அலுவலகத்தை திறந்துவைக்கிறார். அதேபோல திருப்பத்தூர், ஈரோடு, நெல்லை பகுதி களிலும் பா.ஜ.க. அலுவலகங்களை திறந்துவைக்க உள்ளார் என்றார்.

Next Story