ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: ராமதாஸ், தினகரன் கண்டனம்


ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: ராமதாஸ், தினகரன் கண்டனம்
x
தினத்தந்தி 21 Nov 2021 12:27 PM GMT (Updated: 21 Nov 2021 12:27 PM GMT)

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐ.ஐ.டியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது! 

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதை கடுமையாக கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது! 2019-ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐ.ஐ.டி மாற்றக்கூடாது! தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்பட வேண்டும்.  ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் இது குறித்து தமிழக அரசு பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!. இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐஐடியில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதனை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல'' என்று தெரிவித்துள்ளார்.


Next Story