அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம்


அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம்
x
தினத்தந்தி 25 Nov 2021 12:08 AM GMT (Updated: 25 Nov 2021 12:08 AM GMT)

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா-சி.வி.சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், குழப்பத்துடன் கூட்டம் முடிந்தது.

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டம் காலை 10.45 மணிக்கு தொடங்கியது.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:-

அன்வர் ராஜா-சி.வி.சண்முகம் மோதல்

கூட்டம் தொடங்கியவுடன் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா முதலில் பேசுவதற்கு எழுந்தார். சமீபத்தில் அவர், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய ‘ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று கூறி பலர் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்வர் ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி ஹரி, அருள்மொழி தேவன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அன்வர் ராஜாவை நோக்கி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமான கருத்துகளை கூறினார். இதனால் அவருக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழலும் எழுந்தது. இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகி தமிழ் மகன் உசேன், ‘அன்வர் ராஜாவை பேசாமல் அமருங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அன்வர் ராஜா, ‘நான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார். இதைத்தொடர்ந்து கூச்சல்-குழப்பம் முடிவுக்கு வந்தது.

செங்கோட்டையன் கோரிக்கை

பின்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். இந்த குழுவில் மூத்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேசும்போது, ‘அ.தி.மு.க. தொழிற்சங்கம், கட்சியின் சொத்து கணக்கு வழக்கு விவரங்களை சரி பார்க்க வேண்டும். இதில் விடுபட்டுள்ள கட்சி சொத்துகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, ‘கட்சி தலைமை பொறுப்புகளில் விடுபட்ட சாதியினருக்கும் இடம் கொடுக்க வேண்டும்’ என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘கட்சியின் தலைமை கழக பொறுப்புகளில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று பதில் அளித்தார்.

தி.மு.க.வுக்கு சரிவு

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நகர்ப்புற தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் வெற்றி பெற மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும். தற்போது மழை, வெள்ள பாதிப்பு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது போன்றவைகள் மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு சரிவாக இருக்கிறது. எனவே இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொண்டு தேர்தல் பணியாற்றி வெற்றி வாகை சூட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றுவதற்காகத்தான் நான் தர்ம யுத்தத்தை கைவிட்டேன். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். இல்லையென்றால் ஆட்சி பறிபோய் இருக்கும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவன் நான்.

எந்த காலத்திலும் ஒரு குடும்பத்தின் (சசிகலா) பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவேதான் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது, கட்சி தலைமை கூடி முடிவு செய்யும் என்று கூறியிருந்தேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்தான் நமக்கு தலைவர்கள். ஒருவர் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே வழிகாட்டுதல் குழுவை முறைப்படுத்தப்படுத்துங்கள். அதன்பின்னர் இந்த கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திடுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்கட்சி தேர்தல்

காலை 10.45 மணிக்கு தொடங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மதியம் 1.45 மணியளவில் முடிவடைந்தது. இந்த கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக கூட்டம் கூட்டப்பட்டிருந்த வேளையில் அதுகுறித்து பெரியளவில் விவாதிக்கப்படவில்லை.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை முறையாக விரைவில் நடத்திட வேண்டும் என்பது குறித்தே பெரியளவில் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயக்குமார் மறுப்பு

கூட்டம் முடிந்த பின்னர், அன்வர் ராஜா-சி.வி.சண்முகம் இடையே வாக்குவாதம் எழுந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கூட்டத்தில், ‘ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது. வாக்குவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை’ என்று தெரிவித்தார்.

வாக்குவாதம் விவகாரம் குறித்து அன்வர் ராஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. இந்த தகவல் உண்மை இல்லை’ என்று மறுத்தார்.

போட்டுடைத்த செல்லூர் ராஜூ

ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒருமையில் பேசிய அன்வர் ராஜாவை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அனைவரும் கண்டித்தோம். இதையடுத்து அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்’ என்று பதில் அளித்து கூட்டத்தில் வாக்குவாதம் நடைபெற்றதை உறுதி செய்தார்.

சசிகலா விவகாரம் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எம்.ஜி.ஆர். மேல் சத்தியமாக இல்லை’ என்று செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.

Next Story