பாகூர் அருகே 9 வீடுகள் இடிந்து சேதம்


பாகூர் அருகே 9 வீடுகள் இடிந்து சேதம்
x
தினத்தந்தி 25 Nov 2021 7:22 PM GMT (Updated: 25 Nov 2021 7:22 PM GMT)

மழை நின்றும் வெள்ளம் வடியாததால் பாகூர் அருகே 9 வீடுகளின் சுவர்கள் இடிந்தும், தரை தளம் இறங்கியும் சேத மடைந்தன. பள்ளிகள் திறக்கப்பட்டதால் முகாமில் தங்கி இருந்த 20 குடும்பங்கள் தவிக்கின்றன.

மழை நின்றும் வெள்ளம் வடியாததால் பாகூர் அருகே 9 வீடுகளின் சுவர்கள் இடிந்தும், தரை தளம் இறங்கியும்  சேத மடைந்தன. பள்ளிகள் திறக்கப்பட்டதால் முகாமில் தங்கி இருந்த 20 குடும்பங்கள் தவிக்கின்றன.
கிராமங்களில் வெள்ளம்
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக  திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் புதுவை மாநிலத்தில் ஆற்றின் கரையோர கிராமங்களான பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 
இதையடுத்து கிராம மக்கள் மீட்கப்பட்டு அரசு கட்டிடங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தரை தளம் இறங்கியது
இந்தநிலையில் ஓரளவு மழை குறைந்தாலும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்து வருகிறது. சோரியாங்குப்பம்    ஆற்றங் கரையோர பகுதி மற்றும் நாகாத்தம்மன் கோவில் தெருவில் பல நாட்களாக வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டின் சுவர்கள், தரைகள் வலுவிழந்துள்ளன. 
நேற்று முன்தினம் பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள அனுசியா, வசந்தா, மங்கலட்சுமி, பழனியம்மாள் ஆகியோரது வீடுகளில் உள்ள அறைகள் திடீரென்று இடிந்து தரை தளம் உள்ளே இறங்கின.
வீடுகளுக்குள்ளேயே சுமார் 5 அடி அளவுக்கு பாதாள அறை போல் பள்ளம் ஏற்பட்டதால் அங்கு வசித்து வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசில வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் மொத்த  வீடும் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.
தற்போது வெள்ளம் வடியத்தொடங்கியதால், முகாம்களில் தங்கி இருந்த சோரியாங்குப்பம் மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், 4 வீடுகளில் தரை தளம் இறங்கியும், மேலும் 5 வீடுகளில் சுவர்கள் இடிந்து இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றங்கரையோரம் இருந்த மாட்டு கொட்டகைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தது. 
தங்க இடமின்றி பரிதவிப்பு
இந்தநிலையில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டதால், அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த      பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி  உறவினர்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் வீடுகள் இல்லாததாலும், சில இடங்களில் முழுமையாக வெள்ளம் வடியாததாலும் சுமார் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் எங்கு தங்குவது? என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

Next Story