தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு 3 யானைகள் சாவு


தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு 3 யானைகள் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2021 8:03 PM GMT (Updated: 26 Nov 2021 8:03 PM GMT)

கோவை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு 3 யானைகள் பரிதாபமாக இறந்தன.

கோவை,

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அடிக்கடி இடம் பெயர்ந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கோவை-பாலக்காடு ரெயில் தண்டவாளம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியை காட்டு யானைகள் கடக்கும் போது விபத்து ஏற்படுவதை தடுக்க ரெயிலை மெதுவாக இயக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. ஆனாலும் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது தொடர்கதையாக இருக்கிறது.

அந்த வகையில் மீண்டும் ஒரு பரிதாப சம்பவம் நேற்று அரங்கேறியது. அதன் விவரம் வருமாறு:-

ரெயிலில் அடிபட்டு சாவு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரெயில் (எண்-12602) கோவையை நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் கோவையை அடுத்த நவக்கரை அருகே தங்கவேல் காட்டு மூலை என்ற இடத்தில் வந்த போது 2 குட்டிகளுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தை கடக்க முயன்றது.

யானைகள் திடீரென்று தண்டவாள பகுதிக்கு வந்ததால் டிரைவரால் என்ஜினை நிறுத்த முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக 2 குட்டி மற்றும் பெண் யானை மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 குட்டிகள் மற்றும் பெண் யானை ஆகியவை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.

வனத்துறை விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயிலில் இருந்த பயணிகள் இறங்கி பார்த்த போது யானைகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Next Story