‘‘அ.தி.மு.க.வின் கோட்டையாக சென்னை விரைவில் மாறும்’’ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை


‘‘அ.தி.மு.க.வின் கோட்டையாக சென்னை விரைவில் மாறும்’’ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2021 11:42 PM GMT (Updated: 29 Nov 2021 11:42 PM GMT)

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி அடைவோம்’ என்றும், ‘சென்னை, அ.தி.மு.க.வின் கோட்டையாக விரைவில் மாறும்’, என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம் கடந்த 26-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. சென்னை ராயபுரம் எட்டியப்ப நாய்க்கர் பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் எழுச்சியோடு மனுக்களை அளித்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது ஒரு மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். சென்னை விரைவில் அ.தி.மு. க.வின் கோட்டையாக மாறும் என்பது தெரிகிறது. தேர்தலை சுதந்திரமான, அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளுக்காக...

விரைவில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு சிறு கால்வாயில் இருக்கின்ற தண்ணீரை பெரு கால்வாய் மூலம் எடுத்துசென்றிருந்தால் அந்த தண்ணீர் கடலில் சென்று கலந்திருக்கும். இந்த 16 கால்வாய்களை தூர்வாரி வைத்திருந்தால், வெள்ளத்தின் மூலம் பாதிப்படைந்திருக்கும் நிலை இருந்திருக்காது.

எங்களை பொறுத்தவரையில் மக்கள் பிரச்சினைகளுக்கு எப்போதும் துணை நிற்பவர்கள் நாங்கள். அதுதான் அ.தி.மு.க. ஆரம்பத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம். பொய்யான வாக்குறுதிகளை அளித்தது தி.மு.க. மக்கள் பிரச்சினைகளுக்கு போராட என்றும் எங்கள் இயக்கம் தயங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story