62 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீண்: முக்கிய பங்கு வகிக்கும் 3 மாநிலங்கள்...!!
இந்தியாவில் 62 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணடித்ததில் 3 மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரில் தடுப்பூசிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஜனவரி 16-ந் தேதி இந்த தடுப்பூசி திட்டம் முதலில் முன்னுரிமை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இலவச தடுப்பூசி திட்டத்துக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வினியோகித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் 62 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் நாடாளுமன்ற மக்களவையில் வெளியாகி உள்ளது.
இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வீணாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அதிகபட்ச அளவாக 16 லட்சத்து 48 ஆயிரம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. உத்தரபிரதேசத்தில் 12 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் வீணாகி இருக்கின்றன. ராஜஸ்தானில் 6 லட்சத்து 86 ஆயிரம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன.
இந்த 3 மாநிலங்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 36 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. இது வீணாய்ப்போன மொத்த தடுப்பூசிகளில் பாதிக்கும் மேலாகும். 1 லட்சம் தடுப்பூசிக்கு அதிகமான தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களின் பட்டியலில் அசாம், காஷ்மீர், ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்காளம், கர்நாடகம் ஆகியவை உள்ளன.
மக்களவையில் துஷ்யந்த் சிங் என்ற எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story