பொங்கல் பண்டிகை; தமிழகத்தில் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


பொங்கல் பண்டிகை; தமிழகத்தில் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 20 Dec 2021 6:02 PM IST (Updated: 20 Dec 2021 6:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை,


சென்னை தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.  இதில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, வருகிற ஜனவரி 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மொத்தம் 6,468 பேருந்துகளும் என மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்காக, கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே. நகர் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்து இயக்கப்படும்.  பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்கு ஏதுவாக தமிழகத்தில் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள் பற்றிய தகவல்களுக்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.  கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் மாநகர பேருந்துகள் 24 மணிநேரம் இயக்கப்பட உள்ளன.


Next Story