34-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அஞ்சலி


34-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
x
தினத்தந்தி 25 Dec 2021 5:24 AM IST (Updated: 25 Dec 2021 5:24 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைவோம்’ என்று உறுதிமொழி ஏற்றனர்.

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று காலை மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், துணை செயலாளர் இ.சி.சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உறுதிமொழி ஏற்பு

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.டி.ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாவட்ட செயலாளர் சிவ ராஜசேகரன் உள்ளிட்டோரும், திரைப்பட இயக்குனர்கள் கே.பாக்யராஜ், அனு மோகன், சி.ரங்கநாதன், நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட திரையுலகினரும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், வைகை செல்வன் உறுதிமொழி வாசிக்க அ.தி.மு.க.வினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

உறுதிமொழி

அ.தி.மு.க.வினர் ஏற்ற உறுதிமொழியில் அடங்கிய வாசகங்கள் வருமாறு:-

* விடியா அரேச! விடியா அரசே! நீட் தேர்வு விலக்கு எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? மகளிருக்கு மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் எங்கே? பொங்கல் வருது... பொங்கல் வருது... பரிசுத் தொகை எங்கே?

* வருகிறது, வருகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது! நமக்கு பெருகுது, பெருகுது மக்கள் ஆதரவு பெருகுது! எம்.ஜி.ஆர். ஆசிகள் இருக்கிறது! ஜெயலலிதா ஆசிகள் இருக்கிறது! தொண்டர் பலம் இருக்கிறது! மக்கள் துணையும் இருக்கிறது! அடைவோம்... அடைவோம்... வெற்றியை அடைவோம்!

* விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப, தீயசக்தியை அடியோடு அழிக்க சபதம் ஏற்கிறோம்! சபதம் ஏற்கிறோம்!

மேற்கண்ட வாசகங்கள் உள்பட பல்வேறு வாசகங்களை அ.தி.மு.க.வினர் உறுதி மொழியாக ஏற்றனர்.

தே.மு.தி.க. அலுவலகத்தில்

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், குழுக்களாகவும் சாரை, சாரையாக வருகை தந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அருகில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தையும் பார்வையிட்டு சென்றனர்.

தே.மு.தி.க. சார்பில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர். உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், கட்சியின் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சசிகலா

சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில், எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு சசிகலா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவரது தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

வளர்ப்பு மகள்

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் லதா ராஜேந்திரன் மற்றும் சுதா விஜயகுமார், நடிகர் தீபன், ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் கீதா, எம்.ஜி.ஆர். இல்லத்தின் நிர்வாகி குமார் ராஜேந்திரன் உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டி, தொட்டிகள் எல்லாம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் எம்.ஜி.ஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, அவற்றிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், ஆங்காங்கே இலவசமாக உணவும் வழங்கப்பட்டது.

டுவிட்டர் பதிவு

எம்.ஜி.ஆரின் நினைவுதினத்தையொட்டி, மத்திய கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் தனது டுவிட்டர் பதிவில், ‘‘திரையுலகில் தலைசிறந்த நடிகராக தனக்கென தனி தடம் பதித்து, அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணிகள் செய்து, மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆரை நினைவு கொள்வோம்’’ என்று தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘கலையின் மூலம் கிடைத்த பிரபல்யத்தை சமூக வெளியிலும், அரசியல் வெளியிலும் சிறப்பாக செயல்பட பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர்களில் தனித்துவமிக்க எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவரின் வெற்றிகளை நினைவு கூர்வோம்’’ என்று தெரிவித்து உள்ளார்.

Next Story