சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை


சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை
x
தினத்தந்தி 31 Dec 2021 2:11 PM GMT (Updated: 2021-12-31T19:41:59+05:30)

சென்னையில் 2-வது நாளாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை வெளுத்து வாங்கியது.இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து மழை குறைவாகவே இருந்து வந்தது. பகலில் வெயிலின் தாக்கமும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கமுமாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு, சென்னையில் நேற்று பல இடங்களில் திடீரென்று மழை பெய்தது. எதிர்பாராத திடீர் மழையால் நேற்று சென்னை வாசிகள் திக்கு முக்காடி போகினர். 

இந்த நிலையில், 2-வது நாளாக சென்னையில் இன்றும் கனமழை வெளுத்து வாங்கியது. பிற்பகல் 1.30 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  

 கிண்டி, தியாகராயநகர், எழும்பூர், அண்ணாசாலை, அமைந்தகரை, கே.கே.நகர், வடபழனி, புரசைவாக்கம் தானாதெரு, தேனாம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த இந்த கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story