மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x
தினத்தந்தி 6 Jan 2022 12:10 AM GMT (Updated: 6 Jan 2022 12:10 AM GMT)

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை என்றும், நீட் தேர்வு தேவையற்றது என்றும் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதற்காக, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து சட்டசபை கூட்டம் நடந்த கலைவாணர் அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.55 மணிக்கு காரில் வருகை தந்தார்.

அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அணிவகுப்பு மரியாதையுடன் சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்றனர்.

கவர்னர் உரை

சபாநாயகர் இருக்கைக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கைக்கு சபாநாயகர் மு.அப்பாவும், இடதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கைக்கு கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டிலும் வந்தனர்.

சரியாக காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றனர். அதன்பின்னர், காலை 10.01 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கினார்.

அ.தி.மு.க-வி.சி.க. வெளிநடப்பு

அந்த நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் சிந்தனை செல்வன் எழுந்து, “நீட்” தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறாததை கண்டித்து கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதாக கூறி பேசத்தொடங்கினார். அவருக்கு “மைக்” வழங்கப்படவில்லை என்றாலும், கவர்னரின் உரைக்கு இடையே அவர் பேசிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். பின்னர், காலை 10.05 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி, அவையில் தங்குதடையின்றி பேசினார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

முன்னோடி திட்டம்

மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் வகையில் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்னும் முன்னோடி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மொத்தம் ரூ.257 கோடி செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, 42 லட்சத்து 99 ஆயிரத்து 294 நோயாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘வருமுன் காப்போம்’ திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் எங்கும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உயிரிழப்புகள் தவிர்ப்பு

சாலை விபத்துகளால் ஏற்படும் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புகளை குறைக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்’ என்ற உன்னத திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக 609 ஆஸ்பத்திரிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, விபத்துகளில் சிக்கிய 4,482 பேர் அவசர சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வரலாறு காணாத மழைப்பொழிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. முதல்-அமைச்சரே பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்து, பேரிடர் நிவாரணப்பணிகளை முன்னின்று நடத்தியது பாராட்டுக்குரியது. துல்லியமான திட்டமிடல், திறன்மிகு மேலாண்மை, தீவிர மேற்பார்வையின் காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.

ரூ.6,230 கோடி நிவாரண நிதி

இருப்பினும் சாலைகள், பாலங்கள், நீர்நிலைகள் போன்ற கட்டமைப்புகளும், பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.6,230 கோடி நிதியை கோரி விரிவான கோரிக்கைகளை இந்த அரசு அளித்துள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மறுசீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்மொழியை போற்றி, அதன் செம்மையை நிலைநாட்டுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் என்று தலைவர் கருணாநிதி அறிவித்தார். இப்பாடலை தமிழ்நாட்டின் மாநில பாடலாக அதிகாரபூர்வமாக அறிவித்து, அனைத்து பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில், தக்க முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாடப்பட வேண்டும். தனியார் அமைப்புகளிலும் இத்தகைய நடைமுறையை ஊக்குவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழில் மொழிபெயர்ப்பு

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ திட்டத்தின் மூலம், அரசு அமைப்புகள், தனியார் பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம், 1956-ல் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்படும். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கான 100 பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

ஜனவரி 12-ந் தேதி ‘அயலகத் தமிழர் நாளாக’ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அயலகத்தமிழர்களுக்கு தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவு வலுப்பெறுவதுடன், தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும் உதவும். அயலகத் தமிழர்கள், அவர்களது சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்கு உதவுவதற்கு ‘தாய் மண்’ திட்டம் வழிவகை செய்யும்.

நெல் சாகுபடியில் சாதனை

கால்வாய்களை தூர்வாரி, மேட்டூர் அணையில் இருந்து நீரை விடுவித்து, குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பும் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, இவ்வாண்டு 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து, வரலாறு காணாத சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் சில பகுதிகளில் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை தீர்க்கவும், மறுபயிரிட செய்ய தேவையான இடுபொருட்களை வாங்கவும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,038 இழப்பீடு அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் தொடர் முயற்சியால் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 25 லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தில் 37 லட்சம் ஏக்கர் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை வள மேலாண்மை திட்டம்

தமிழ்நாடு அதிக அளவில் கனிமவளங்களை கொண்டிருந்தாலும், அதற்கேற்ற வருவாயை மாநில அரசு பெறுவதில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக கனிமங்களில் இருந்து பெறப்படும் வருவாயில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்கும், அரசிற்கு உரிய வருவாயை திரட்டுவதற்கும் ‘இயற்கை வள மேலாண்மைத் திட்டம்’ ஒன்று வகுக்கப்படும்.

பல ஆண்டுகளுக்கு பின் முல்லைப்பெரியாறு அணையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அளவான 142 அடி உயரத்திற்கு நீரை இந்த ஆண்டு தொடர்ந்து பல நாட்கள் தேக்க முடிந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பாணையின்படி அணையின் முழுக்கொள்ளளவான 152 அடியை எய்த தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி இல்லை

அண்டை மாநிலங்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கும் அதே வேளையில், நதிநீர் பங்கீட்டில் தனது உரிமைகளை ஒருபோதும் கைவிடாமல், தனது நியாயமான பங்கிற்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும். காவிரி ஆற்றில் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொண்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

பள்ளிகளில் இடைநின்ற 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாநிலக்கல்வி அமைப்பின் முதுகெலும்பாய் திகழும் அரசு பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

உயர்தர தகவல் தொழில்நுட்பத்தளம்

கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள், அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களும், மாணவர்களும் பயனடையும் வகையில் உயர்தர தகவல் தொழில்நுட்பத்தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில், வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உயர்கல்வி பாடத்திட்டத்தை மறுசீரமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகின்றது. இதுதவிர, தொழில்துறையின் உதவியுடன் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பாடத்திட்டத்தையும், ஆய்வக வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நவீன தொழிற்பயிற்சி

எதிர்காலத்தில் ஏற்றம் பெறக்கூடிய தொழில்களாக கண்டறியப்பட்ட துறைகளில் நமது மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழிற்பயிற்சிகள் அரசால் தொடங்கப்படும்.

குறைந்த மின் அழுத்தத்தையும், கூடுதல் மின்சுமையை தவிர்க்கவும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் 8,905 மின்பகிர்மான மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என இந்த அரசு அறிவித்துள்ளது.

‘நீட்’ தேர்வு தேவையற்றது

பொதுவாக, நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு “நீட்” போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றன என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமன்றி, தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, காலத்தை வென்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளுடன் என் உரையை நிறைவு செய்கிறேன். வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு. ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெய்ஹிந்த்

காலை 10.01 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10.42 மணிக்கு நிறைவு செய்தார். அதன்பிறகு, கவர்னரின் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவர் காலை 10.43 மணிக்கு தனது பேச்சை தொடங்கி காலை 11.29 மணிக்கு நிறைவு செய்தார். ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி நிறைவாக பயன்படுத்திய “ஜெய்ஹிந்த்” என்ற வார்த்தையை சபாநாயகர் மு.அப்பாவு பயன்படுத்தவில்லை.

Next Story