சென்னையில் முககவசம் அணியாத 5,997 பேருக்கு ரூ.12½ லட்சம் அபராதம்


சென்னையில் முககவசம் அணியாத 5,997 பேருக்கு ரூ.12½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 6 Jan 2022 10:21 PM GMT (Updated: 6 Jan 2022 10:21 PM GMT)

சென்னையில் முக கவசம் அணியாத 5 ஆயிரத்து 997 பேருக்கு ரூ.12 லட்சத்து 59 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணிவதை உறுதி செய்ய மாநகராட்சி, சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. மண்டலத்துக்கு 2 குழுக்கள் விதம் 30 குழுக்கள் கண்காணிப்பு பணியை தொடங்கியது.

ரூ.12 லட்சத்து 59 ஆயிரம்

15 மண்டலத்தில் 5 ஆயிரத்து 997 பேருக்கு ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 600 அபராதம் விதித்து சிறப்பு குழுக்கள் நடவடிக்கை மேற்கொண்டது.

இதில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் முக கவசம் அணியாத 620 நபர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 51 ஆயிரமும், குறைந்தபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 138 நபர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 900 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்த 5-ந்தேதி ஒரே நாளில் மட்டும் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 2 ஆயிரத்து 286 நபர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 300 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது என கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

ரூ.10½ லட்சம் அபராதம் வசூலித்த போலீசார்

சென்னை பூக்கடை பகுதியில் துணை கமிஷனர் மகேஷ்வரன் தலைமையிலும், புளியந்தோப்பு பகுதியில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலும் நேற்று போலீசார் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

முககவசம் அணியாதவர்களிடம் தீவிரமாக அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மட்டும், 5,328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஊர் சுற்றியவர்களின் 61 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 ஆட்டோக்களும் பறிமுதல் ஆனது.

Next Story