நீட் தேர்வு தேவை; அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்த பா.ஜ.க. முடிவு


நீட் தேர்வு தேவை; அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்த பா.ஜ.க. முடிவு
x
தினத்தந்தி 7 Jan 2022 1:37 PM GMT (Updated: 7 Jan 2022 1:37 PM GMT)

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தேவை என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தெரிவித்து உள்ளார்.


சென்னை,

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 6.1.2022 அன்று 'நீட்' தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து, சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை (8.1.2022) காலை 10.30 மணியளவில் தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நீட் தேர்வு தொடர்புடைய அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்றிடுவார்.  இந்த கூட்டத்தில், நீட் தேர்வு தேவை என பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் வலியுறுத்துவார்.  நீட் தேர்வின் சாதகங்கள் பற்றி நாளைய கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என கூறியுள்ளார்.

இதேபோன்று, பஞ்சாபில் ஏற்பட்ட பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கு பஞ்சாப் அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.




Next Story