புள்ளியியல் சார்நிலை பணியிடங்களுக்கான தேர்வு: தமிழகத்தில் 79 மையங்களில் 32,262 பேர் எழுதினர்


புள்ளியியல் சார்நிலை பணியிடங்களுக்கான தேர்வு: தமிழகத்தில் 79 மையங்களில் 32,262 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Jan 2022 7:45 PM GMT (Updated: 2022-01-12T01:15:54+05:30)

தமிழகத்தில் 79 மையங்களில் நடந்த புள்ளியியல் சார்நிலை பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை 32 ஆயிரத்து 262 பேர் எழுதினர் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் புள்ளியியல் சார்நிலை பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு கடந்த 9-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும், பஸ் போக்குவரத்து இல்லாததாலும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் 79 மையங்களில் நடந்தது.

தஞ்சை மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்தது. தஞ்சையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையத்தை தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

32,262 பேர் எழுதினர்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில், 79 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 32 ஆயிரத்து 262 பேர் எழுதினர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது.

தேர்வு எழுதுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். யாருக்காவது அதிக வெப்பநிலை இருந்தால் அவர்கள் தனியாக தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் வழியில்...

இனி வரக்கூடிய காலங்களில் தேர்வுகள் தமிழ் வழியில் நடத்தப்படும். தற்போது நடைபெறும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டபோது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகாததால் வழக்கம்போல நடைபெறுகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் இருவிதமான பணிகள் இருக்கும். குரூப்-4 தேர்வில் கொள்குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) தமிழில் இருக்கும். மற்ற குரூப் 1, 2 ஆகிய தேர்வுகளில் ‘டெஸ்கிரிப்டிவ்’ வினாத்தாள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story