கொரோனா பரவல் தீவிரம்: 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - ஐகோர்ட்டு அறிவுரை


கொரோனா பரவல் தீவிரம்: 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 12 Jan 2022 11:52 PM GMT (Updated: 12 Jan 2022 11:52 PM GMT)

கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை தவிர்க்கலாம் என்றும், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், நெல்லையை சேர்ந்த வக்கீல் அப்துல் வஹாபுதீன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘கொரோனா வைரசின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா வைரசின் 3-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதனால் அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

கட்டாயம் இல்லை

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மழலையர் வகுப்பு மற்றும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், 10 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடுவதற்காகவே பள்ளிகளுக்கு அழைக்கப்படுகின்றனர். நேரடி வகுப்புகள் நடத்துவதும், அதில் கலந்துகொள்வதும் கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள்தான் முடிவு செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்துகொள்வது மாணவர்களின் விருப்பத்திற்குட்பட்டது’’ என்று கூறினார்.

தள்ளுபடி

அதற்கு நீதிபதிகள், ‘‘3-வது அலை அதிகரித்துவரும் நிலையில், 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கலாம். ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தலாம். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்களும் மற்றும் பிற ஊழியர்கள் என்று அனைவரது பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்’’ என்று அறிவுரை வழங்கினர்.

பின்னர், ‘‘அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடவேண்டும் என்று எப்படி உத்தரவிட முடியும்?’’ என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story