அரசு தடை உத்தரவை மீறிய இறைச்சி கடைகளுக்கு அபராதம் மதுக்கடைகள் திறப்பா கலால் துறையினர் அதிரடி


அரசு தடை உத்தரவை மீறிய இறைச்சி கடைகளுக்கு அபராதம் மதுக்கடைகள் திறப்பா கலால் துறையினர் அதிரடி
x
தினத்தந்தி 15 Jan 2022 2:29 PM GMT (Updated: 15 Jan 2022 2:29 PM GMT)

அரசு தடை உத்தரவை மீறிய இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுபான கடைகளில் கலால்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி
அரசு தடை உத்தரவை மீறிய இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுபான கடைகளில் கலால்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

உத்தரவு மீறல்

திருவள்ளுவர் தினத்தையொட்டி புதுவையில் இறைச்சி மற்றும் மதுபானம் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து புதுச்சேரி நகர பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் செயல்படும் இறைச்சி கடைகள்  மூடப்பட்டு இருந்தது. 
ஆனால் உத்தரவை மீறி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடு, கோழி இறைச்சி கடைகள்  வழக்கம்போல் செயல்பட்டன. முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையில் இருந்து தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் தரையில் கடை விரித்து மீன்களை விற்பனை செய்தனர். 
அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கலால்துறையினர் சோதனை

இதேபோல் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தலைமையில் கலால்துறை ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து புதுச்சேரி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
கிராமப்புறங்கள், மாநில எல்லைகளில் உள்ள மது, சாராயக்கடைகளில் கள்ளத்தனமாக விற்பனை நடைபெறுகிறதா? என தீவிர சோதனை நடத்தினர்.
மதுபானம் விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ள ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் மது விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் சோதனை நடத்தினர். 

சாராயம் விற்பனை

அப்போது கிராம பகுதிகளில் சில இடங்களில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கலால் துறையினரை கண்டதும் சாராய கேன்களை அந்த இடத்திலேயே போட்டு விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அதனை பறிமுதல் செய்து கலால்துறையினர், சாராயம் விற்பனை செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story