உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் குழு சந்திப்பு


உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் குழு சந்திப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 12:28 PM GMT (Updated: 17 Jan 2022 12:28 PM GMT)

தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தர அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக டி.அர் பாலு எம்.பி தெரிவித்தார்.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில், திமுக அரசு  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகும் அந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 28.12.2021 அன்று நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள், ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்று, நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும், இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படக் கூடிய காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கக் கூடிய மனு ஒன்றையும் அளித்தனர்.

அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டனர். ஆனால் அவர்களை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்து வந்தார். 3 முறை உள்துறை மந்திரியை சந்திக்க முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த  4 நாட்களுக்கு முன்பு அமித்ஷா அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்ட அதிகாரிகள், 17-ந் தேதி மாலை 4.30 மணிக்கு உங்களை சந்திக்க உள்துறை மந்திரி நேரம் ஒதுக்கித் தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். 

உள்துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி உடனடியாக முடிவெடுத்து, என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது குறித்து, தமிழக முதல் அமைச்சரிடம்  தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்” என்றார். 


Next Story