நாய்களை பராமரிப்பது குறித்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு முன் உதாரணமாக திகழ வேண்டும்


நாய்களை பராமரிப்பது குறித்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு முன் உதாரணமாக திகழ வேண்டும்
x
தினத்தந்தி 21 Jan 2022 9:54 PM GMT (Updated: 2022-01-22T03:24:54+05:30)

தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களை பராமரிப்பது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கி, நாட்டிலேயே தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக திகழவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஐ.ஐ.டி., வளாகம் நாய்கள் பூங்கா அல்ல. நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின் பணியல்ல என்று கருத்து தெரிவித்தது. மேலும், ஐ.ஐ.டி. வளாகத்தில் ஏராளமான மான்கள் இருப்பதால், அங்குள்ள நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

எண்ணிக்கை அதிகரிப்பு

அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், “ஐ.ஐ.டி., யிலிருந்து 22 நாய்கள் பிடிக்கப்பட்டு நெம்மேலியில் உள்ள தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த நாய்கள் மருத்துவ சிகிச்சையுடன் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

அப்போது மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், “தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இதனால், இந்த பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

முன் உதாரணம்

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களை பராமரிப்பது, அவற்றை கண்காணிப்பது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட பிற வெளிநாடுகளில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை மாநகராட்சியும் ஏன் விதிகளை உருவாக்கக்கூடாது? இவ்வாறு விதிகளை உருவாக்கி, இந்த விவகாரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக திகழவேண்டும். நாய்களுக்கு மட்டுமல்ல பொதுவாக வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க விதிகள் உருவாக்க வேண்டும்.

கருத்து தெரிவிக்கலாம்

செல்லப்பிராணிகள் வளர்ப்பு, பராமரிப்பை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்து, விலங்குகளின் பொறுப்பை அதன் உரிமையாளர்கள் மீது சுமத்த வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு, தன்னார்வ அமைப்புகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த வழக்கை வருகிற பிப்ரவரி 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story