முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி மரணம் மோடி இரங்கல்


முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி மரணம் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 23 Jan 2022 10:13 PM GMT (Updated: 2022-01-24T03:43:42+05:30)

முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி மரணம் மோடி இரங்கல்.

சென்னை,

தமிழக அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நாகசாமி (வயது 91). தொல்லியல் ஆய்வு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் மீது பற்றுக்கொண்ட இவர் பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினரோடு வசித்து வந்த நாகசாமி, வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

இந்திய தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த நாகசாமி, 1959 முதல் 1963 வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். 1963 முதல் 1966 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாக இருந்தார். 1966-ம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டபோது, அதனுடைய முதலாவது இயக்குனராக இருந்தவர் நாகசாமி.

இவரது ஆய்வுகளை பாராட்டும் விதமாக மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார்.

நாகசாமியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தமிழ்நாட்டின் துடிப்பான கலாசாரத்தை பிரபலப்படுத்துவதில் நாகசாமியின் பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள். வரலாறு, கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி’ என குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story