பொங்கல் பரிசு வினியோகத்தில் ரூ.500 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு


பொங்கல் பரிசு வினியோகத்தில் ரூ.500 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு
x
தினத்தந்தி 24 Jan 2022 9:58 PM GMT (Updated: 24 Jan 2022 9:58 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் சுமார் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பரிசு

தமிழ்நாட்டில் பொது வினியோக முறையில் பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகைப்பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கத் தொகையை அ.தி.மு.க. அரசு வழங்கியது.

செத்த பல்லி

தற்போது கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதை நிறுத்தியது. சுமார் 2.15 கோடி பயனாளிகளுக்கு ரூ.1,296.88 கோடி செலவில், 21 வகையான மளிகைப்பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதன்படி கடந்த 4-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டது. இதில் கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் என்னவென்றால், பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் தரம் குறைந்ததாக இருந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் நந்தன் என்ற பயனாளிக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் புளியில் செத்துப்போன பல்லி இருந்தது.

கரும்பு விலை

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நந்தன் மற்றும் அவரது ஆட்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து சித்திரவதை செய்தனர். இதனால் மனவேதனையில் நந்தன் மகன் குப்புசாமி தற்கொலை செய்துகொண்டார். இதுபோல தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விவசாயிகளிடம் இருந்து கரும்பு 33 ரூபாய்க்கு வாங்கியதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், ரூ.13 முதல் ரூ.16 வரை மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு 50 சதவீத தொகையை வழங்கிவிட்டு, பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மளிகைப்பொருட்களின் எடை, உற்பத்தி செய்யப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் என்று எந்த விவரமும் குறிப்பிடவில்லை.

ரூ.500 கோடி ஊழல்

இதுகுறித்து ஜனவரி முதல் வாரமே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அதை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மறுத்தார். குற்றச்சாட்டை மூடி மறைக்க அவர் முற்பட்டார். பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் மிகப்பெரிய, அதாவது சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. மளிகைப்பொருட்கள் வெளிமாநிலங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக போலீசார் விசாரித்தால் நியாயமாக இருக்காது. எனவே இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story