பாதிப்பு குறைந்தது, உயிரிழப்பு அதிகம்; 30 ஆயிரத்து 215 பேருக்கு கொரோனா


பாதிப்பு குறைந்தது, உயிரிழப்பு அதிகம்; 30 ஆயிரத்து 215 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2022 10:51 PM GMT (Updated: 24 Jan 2022 10:51 PM GMT)

தமிழகத்தில் நேற்று 30 ஆயிரத்து 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17,471 ஆண்கள், 12,744 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,296 பேரும், கோவையில் 3,786 பேரும், செங்கல்பட்டில் 1,742 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 107 பேரும், மயிலாடுதுறையில் 88 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட 1,037 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4,528 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில்...

தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 64 ஆயிரத்து 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 18 ஆயிரத்து 627 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 58 ஆயிரத்து 376 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 576 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 935 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 1,136 தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

46 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 25 பேரும் என 46 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 17 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 4 பேரும், தஞ்சாவூரில் 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, தேனி, தூத்துக்குடியில் தலா இருவரும், கோவை, கடலூர், ஈரோடு, நாகப்பட்டினம், சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 18 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 264 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 639 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,418 பேரும், கோவையில் 2,193 பேரும், செங்கல்பட்டில் 2,142 பேரும் அடங்குவர். இதுவரையில் 29 லட்சத்து 20 ஆயிரத்து 457 பேர் குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 2 லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர் குணமடையாமல் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story