பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டல்: போலீசாரை கண்டித்து தீக்குளித்த வாலிபர் பரிதாப சாவு


பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டல்: போலீசாரை கண்டித்து தீக்குளித்த வாலிபர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 25 Jan 2022 7:51 PM GMT (Updated: 25 Jan 2022 7:51 PM GMT)

மதுரையில் பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டிய போலீசாரை கண்டித்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை,

மதுரை பி.பி.குளம் இந்திராநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மலைராஜ். இவருடைய மகன் ஈசுவரன் (வயது 30). இவர் கடந்த 18-ந்தேதி இரவு தல்லாகுளம் அவுட்போஸ்ட் அம்பேத்கர் சிலை அருகே தீக்குளித்தார். உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஈசுவரன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக மிரட்டியதாலும், எங்களிடம் வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாலும் தான் அவர் தீக்குளிதார் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வீடியோ வெளியிட்டார்

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஈசுவரன், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தல்லாகுளம் போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். பணம் கேட்டும் தொந்தரவு செய்கிறார்கள்.

அவ்வாறு பணம் கொடுக்கவில்லை என்றால் கஞ்சா, மது விற்பதாக கூறி பல்வேறு வழக்குகளில் கைது செய்வதாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் எனது குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டி வருகிறார்கள். எனவேதான் போலீசாரை கண்டித்து, நான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் என்று அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பரிதாப சாவு

இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈசுவரன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈசுவரனின் சகோதரி சிவகாமி கூறும் போது, எனது சகோதரர் தீக்குளித்து இறந்ததற்கு தல்லாகுளம் போலீசார் தான் காரணம். எனவே அதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை|சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும், என்றார்.

Next Story